நடிகர் விஜய் அரசியலில் குதித்த பிறகு, அவரது திரைப்பயணத்தின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், சில நாட்களுக்கு முன்பு படத்தின் 5 நிமிடக் காட்சிகள் இணையத்தில் கசிந்தன.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒட்டுமொத்தப் படமும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது. தணிக்கை வாரியத்தின் மூலமாகவே படம் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தயாரிப்பு தரப்பிற்கும் ரசிகர்களுக்கும் இது பெரும் கவலையை அளித்துள்ளது.

இந்நிலையில், படம் கசிந்ததற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தணிக்கைக்காக வழங்கப்படும் படங்கள் மிகவும் பாதுகாப்பான ‘KDM’ கடவுச்சொல் முறையிலேயே கையாளப்படுவதாகவும், அந்த ரகசியக் குறியீடு தயாரிப்பாளரிடம் மட்டுமே இருக்கும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் 17-ஆம் தேதியே படத்தின் டிஜிட்டல் தொகுப்பு விண்ணப்பித்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால், அதன்பிறகு நடந்த கசிவுகளுக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்றும் தணிக்கை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.