வெற்றி என்பது தனி ஒருவருக்கானது அல்ல, அது ஒரு குடும்பத்தின் பல ஆண்டுகால உழைப்பு மற்றும் தியாகத்தின் பலன் என்பதை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மெய்ப்பித்துக் காட்டியுள்ளார். பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமேதா ஷேக் என்ற பெண், கடுமையான உழைப்பிற்குப் பிறகு மஹாராஷ்டிர காவல்துறையில் அதிகாரியாகத் தேர்வாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்ததும், உணர்ச்சிப் பெருக்கில் அவர் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழ வைத்துள்ளது. பொதுமக்களுக்கு முன்னிலையில் தனது தந்தையைத் தனது தோளில் சுமந்து கொண்டு அவர் ஆடிய ஆனந்த நடனம், பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது.
சுமேதா காவல்துறை சீருடையில் பெருமையுடன் தனது தந்தையைச் சுமந்தபடி வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளாகத் தனது கனவுக்காகத் தந்தை செய்த தியாகங்களை மதிக்கும் விதமாகவே சுமேதா இந்த நெகிழ்ச்சியான செயலில் ஈடுபட்டுள்ளார்.
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்குப் பின்னால் இருக்கும் குடும்பத்தின் ஆதரவை இந்த ஒரு நிமிடம் வீடியோ பறைசாற்றுகிறது. “பெண் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும்” என்பதற்குச் சான்றாக இருக்கும் இந்த வீடியோவைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் சுமேதாவிற்கும் அவரது தந்தைக்கும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.
தந்தையின் கனவைத் தோளில் சுமந்து இன்று நிஜமாக்கியுள்ள இந்த மகளின் செயல், ஒரு உன்னதமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
