அமெரிக்காவில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், அந்த இடங்களை நிரப்ப ‘வீடியோ கேம்’ விளையாடுபவர்களை அமெரிக்க அரசு தற்போது நாடியுள்ளது.

இதற்காக ‘எக்ஸ்பாக்ஸ்’ மற்றும் ‘ஃபோர்ட்நைட்’ போன்ற கேம்களை மையப்படுத்தி ஒரு புதிய விளம்பரத்தை ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் வெளியிட்டுள்ளது.

இந்தப் பணியில் சேருபவர்களுக்கு வெறும் மூன்றே ஆண்டுகளில் சுமார் 1.4 கோடி ரூபாய் (1,55,000 டாலர்) வரை சம்பளம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேமர்களுக்கு இருக்கும் வேகமான முடிவெடுக்கும் திறன் மற்றும் திரையை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆற்றல், விமானப் போக்குவரத்தைக் கையாள மிகவும் உதவும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

விமானங்களின் வேகமான மாற்றங்களைக் கவனிப்பது, ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது மற்றும் இக்கட்டான சூழலில் பதற்றமின்றிச் செயல்படுவது போன்ற திறன்கள் கேமர்களுக்கு இயல்பாகவே இருப்பதால் அவர்களுக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இருப்பினும், விண்ணப்பிப்பவர்கள் நேரடியாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்; அவர்களுக்குக் கடுமையான கணினித் தேர்வுகள், மனநலச் சோதனைகள் மற்றும் பல மாத காலப் பயிற்சிகள் வழங்கப்படும்.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பணியாளர் தட்டுப்பாட்டைப் போக்க, பொழுதுபோக்காகக் கருதப்படும் கேமிங்கை ஒரு தொழில்முறைப் பயிற்சியாக அமெரிக்க அரசு பார்ப்பது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.