பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் உண்டு உறைவிடப் பள்ளியின் விடுதியில், 5 வயது சிறுவன் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியுள்ளது.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட அந்தப் பள்ளியின் கேன்டீன் ஊழியர் முகேஷ் குமார் (46) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த முகேஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தச் சிறுவனைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அந்தச் சிறுவன் கத்திவிடுவான் என்ற பயத்தில் பிளேடால் அவனது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததோடு, சிறுவனின் பிறப்புறுப்பையும் சிதைத்துள்ளார். மறுநாள் காலையில் விடுதி உரிமையாளர் மூலம் தகவல் கிடைத்து மருத்துவமனைக்குச் சென்ற தந்தை, தனது மகன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
பாட்னாவில் உள்ள உயர்தர மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். விசாரணையில், விடுதியில் தங்கியிருந்த சிறுவர்கள் தன்னை ‘ஆண்மை இல்லாதவன்’ என்று கேலி செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரத்தைச் செய்ததாக முகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் தருண் குமார் உட்படச் சிலரை போலீசார் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
