மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்திலுள்ள சோயத்கலா பகுதியில், தேர்வு எழுத பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பள்ளி வளாகத்தில் இருந்த கூடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் கலைந்து வந்து மாணவர்களைத் தாக்கத் தொடங்கின. இந்த எதிர்பாராத தாக்குதலால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், 4-ம் வகுப்பு படித்து வந்த ராமன் கராடா என்ற சிறுவன் தேனீக்களின் கூட்டத்தில் சிக்கி படுகாயமடைந்தான்.

உடனடியாக மீட்கப்பட்ட ராமன் மற்றும் காயமடைந்த மற்ற 5 மாணவர்கள் உள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ராமனின் நிலைமை மோசமடைந்ததால் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

பள்ளி வளாகத்தில் தேனீக் கூடுகள் இருப்பது தெரிந்தும் அவற்றை அகற்றாத பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, பள்ளி முதல்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற தேனீ தாக்குதல்கள் அதிகரித்து வருவது மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.