அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஈரானுடன் ஏற்பட்ட 40 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம், வெறும் 24 மணிநேரத்திற்குள் கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்ரேல் தனது அண்டை நாடான லெபனான் மீது இதுவரை இல்லாத அளவில் மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் ராணுவம் அதிரடி காட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) ஈரான் மீண்டும் மூடியுள்ளது. துருக்கி நாடும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, லெபனானின் இறையாண்மைக்குத் தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்தித் தனக்கான நற்பெயரை ஈட்ட நினைத்த பாகிஸ்தானின் திட்டம் தற்போது இந்தத் தாக்குதலால் முற்றிலுமாக சிதைந்து போயுள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன.