சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவிலிருந்து போர்த்துகீசிய தலைநகர் லிஸ்பனுக்குப் புறப்பட்ட ‘நோசா சென்ஹோரா டோ காபோ’ (Nossa Senhora do Cabo) என்ற பிரம்மாண்டக் கப்பல், கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1721-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவாவிலிருந்து தங்கம், வெள்ளிப் பாளங்கள், வைரம், முத்துக்கள் மற்றும் விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற இந்தக் கப்பலை, ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் அருகே ‘ஒலிவியர் லெவாசர்’ மற்றும் ‘ஜான் டெய்லர்’ என்ற கொடூர கடற்கொள்ளையர்கள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
கப்பலில் இருந்த பெரும் புதையலை கொள்ளையடித்த அவர்கள், ஆதாரங்களை மறைக்கக் கப்பலைச் சமுத்திரத்தில் மூழ்கடித்தனர். தற்போது அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் மடகாஸ்கர் அருகே இந்தக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், கொள்ளையர்களால் அள்ளிச் செல்ல முடியாத அளவுக்கு எஞ்சியிருந்த 3,300-க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள், சீன மண்பாண்டங்கள் மற்றும் அரிய வகை சிலைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இன்றைய சந்தை மதிப்பில் சுமார் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் புதையல் வேட்டை, 18-ம் நூற்றாண்டின் கடல் வணிகம் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்த பல புதிய உண்மைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
