மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர், தற்போது ‘ஆம் ஜனதா உன்னயன்’ என்ற கட்சியை நடத்தி வருகிறார். வரும் சட்டசபைத் தேர்தலில் இவர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டது.
அதில், மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பாஜகவிடம் இருந்து ரூ.1,000 கோடி வாங்கத் திட்டம் இருப்பதாகவும், முஸ்லிம் வாக்குகளைப் பிரித்து பாஜகவிற்கு உதவலாம் என்றும் ஹுமாயூன் கபீர் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹுமாயூன் கபீர், அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்று விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஒவைசி தனது கூட்டணியை முறித்துக் கொண்டார். இதற்கிடையே, பாஜகவிற்கு உதவுவதற்காகவே ஒவைசி போன்றவர்கள் இது போன்ற தந்திரங்களைச் செய்கிறார்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் புதிய குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார். இது தற்போது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
