நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை குழுப் பிரச்சினைகளால் நீண்ட நாட்களாக வெளியாகாமல் முடங்கியிருந்தது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக இப்படத்தின் எடிட்டிங் செய்யப்பட்ட முழுப் பதிப்பும் இணையதளங்களில் கசிந்து திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இப்படிச் சட்டவிரோதமாக வெளியானதை அடுத்து, படக்குழுவினர் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (X) தளத்தில் மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பும், ஆர்வமும் இப்படி வீணடிக்கப்படுவது இதயத்தை நொறுக்குகிறது.
தயவுசெய்து யாரும் இந்தத் திரைப்படத்தை இணையதளங்களில் பார்க்கவோ அல்லது பகிரவோ வேண்டாம். உழைப்பிற்கு மதிப்பளியுங்கள்;
இந்தச் செயல் மன்னிக்க முடியாத ஒன்று” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தேர்தல் நேரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில், சக நடிகர் ஒருவரின் உழைப்பிற்காகச் சூர்யா குரல் கொடுத்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
