விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சனைகளால் இன்னும் திரைக்கு வராத நிலையில், முழு படமும் இணையத்தில் கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்சார் சான்றிதழ் தள்ளிப்போன நிலையில், தற்போது படம் லீக் ஆகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது வேதனையளிக்கிறது; இதைச் செய்தவர்களை அரசு கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
படம் எப்படி வெளியானது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. அரசியல் காரணங்களுக்காக யாராவது வேண்டுமென்றே கசியவிட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக, பா.ஜ.க நிர்வாகி வினோஜ் பி செல்வம், இந்தப் படத்தின் லீக்கிற்கு ஆதவ் அர்ஜுனா காரணமாக இருக்கலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம், படத்தில் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்கு கேட்பது போன்ற காட்சிகள் இருப்பதால், விஜய் தரப்பே இதைச் செய்திருக்கலாமோ எனச் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலால் சினிமா துறையினர் கவலையடைந்துள்ளனர்.
