இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் அரங்கில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 2025 ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், பவர்ப்ளே ஓவர்களில் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறார்.
குறிப்பாக, அனுபவம் வாய்ந்த ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை விளாசி தனது பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதங்களுடன் 374 ரன்கள் குவித்துள்ள இவரின் ஸ்ட்ரைக் ரேட் 218ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் காணும் வைபவ், குறைந்த பந்துகளில் அதிக ரன்களைக் குவித்து ராஜஸ்தான் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறார். இவரின் அபாரத் திறமையைக் கண்டு வியந்த முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ஜதீன் பரஞ்சபே, எதிர்காலத்தில் வைபவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
ஒருவேளை இவர் மீண்டும் ஏலத்திற்கு வரும் சூழல் ஏற்பட்டால், இவரை வாங்க கடும் போட்டி நிலவும் என்றும், அதன் விலை ரூ. 30 கோடி வரை சென்று ரிஷப் பண்ட்டின் சாதனையை முறியடிக்கவாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
