தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ என்பது ஒரு வழக்கமான விஷயமாக மாறிவிட்ட நிலையில், ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியருக்கு அதுவே வினையாக முடிந்துள்ளது.
‘The 15’ என்ற நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் நிறுவனர் நிகில் ராணா என்பவர், தனது ஊழியர் ஒருவருடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடலை லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அந்த ஊழியர், “இன்று சில காரணங்களால் என்னால் அலுவலகம் வர முடியாது, எனவே வீட்டில் இருந்து வேலை செய்கிறேன்” என்று மெசேஜ் செய்துள்ளார்.
அந்த மெசேஜ் வந்த இரண்டாவது நிமிடமே பதிலளித்த முதலாளி நிகில் ராணா, “இன்றுதான் உனது வேலையின் கடைசி நாள், கிளம்பு” என அதிரடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தனது நிறுவனத்தில் ‘நோட்டீஸ் பீரியட்’ என்ற பாலிசியே கிடையாது என்றும், வேலையில் பொறுப்பு இல்லாதவர்களுக்குத் தனது நிறுவனத்தில் இடமில்லை என்றும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
ஆனால், இந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் வைரலானதை அடுத்து, “ஒரு நாள் லீவு கேட்டதற்காக இப்படியா இரக்கமில்லாமல் நடந்துகொள்வது?” என நெட்டிசன்கள் அந்த நிறுவனத் தலைவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
