குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சந்த்கேடா பகுதியில், இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஹோட்டலில் வாங்கிய தோசையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட ‘புட் பாய்சனிங்’ (Food Poisoning) காரணமாகவே சிறுமிகள் இறந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், தடயவியல் ஆய்வகத்தின் (FSL) சோதனையில் சிறுமிகளின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானதால் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

போலீஸார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது ஒரு ரகசிய டைரி சிக்கியது. அதில், அந்தத் தாய் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்ற தனது ஆசையைப் பற்றி எழுதியிருந்தது தெரியவந்துள்ளது.

முதல் பெண் குழந்தைக்குப் பிறகு இரண்டாவது குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று அந்தப் குடும்பம் ஏங்கியதும், அந்த ஆசை நிறைவேறாத விரக்தியில் இந்த கொடூரச் செயல் நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சிறுமிகளின் தந்தை மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்ததும், அவர் ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீஸார் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.