மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க கொள்ளையர்கள் மீது பழிபோட்டு நாடகமாடிய மனைவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தார் மாவட்டம் கோந்திகேடா கிராமத்தைச் சேர்ந்த மிளகாய் வியாபாரி தேவகிருஷ்ணா. கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் இவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இவரது மனைவி பிரியங்கா, “வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தனது கணவரைக் கொன்றுவிட்டதாக” கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ராஜோத் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியங்காவிற்கும், கமலேஷ் புரோகித் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு திருமண விழாவில் தொடங்கிய இந்த பழக்கம், நாளடைவில் கொலையில் முடிந்துள்ளது.
Crime news: New video of Priyanka, who orchestrated her husband’s murder for her boyfriend in MP, causes a stir! MP Tak
pic.twitter.com/UoO5ChfgGy— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 10, 2026
கடந்த 2021-ஆம் ஆண்டு கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்குச் சென்ற பிரியங்கா, 3 ஆண்டுகள் அங்கேயே தங்கியுள்ளார். அப்போதுதான் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தேவகிருஷ்ணாவுக்குத் தெரியவந்துள்ளது. மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்த பிரியங்கா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காகக் கூலிப்படையினரை ஏவி, கடந்த 10 நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டு ஏப்ரல் 7 அன்று கொலையை அரங்கேற்றியது அம்பலமானது.
இந்நிலையில், பிரியங்கா தனது கணவரைத் துன்புறுத்தும் இரண்டு புதிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பிரியங்கா தனது கணவரிடம் தகராறு செய்வதும், அதைத் தேவகிருஷ்ணா வீடியோ எடுக்க முயலும்போது அவரைக் கத்தி மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. பிரியங்கா யாரிடமோ ரகசியமாகத் தொலைபேசியில் பேசுவதை தேவகிருஷ்ணா தட்டிக்கேட்க, அதற்காக அவர் கணவரைச் சித்ரவதை செய்வது தெரிகிறது. கணவரைத் திட்டமிட்டுக் கொன்ற பிரியங்கா மற்றும் அவரது கள்ளக்காதலன் கமலேஷ் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
