கேரள சட்டசபைத் தேர்தலின் போது திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்சயா என்ற இளம்பெண், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் செய்யும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது இடது கை ஆள்காட்டி விரலில் தையல் போடப்பட்டு பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது.

மேலும் தேர்தல் விதிகளின்படி அதே விரலில் மை வைக்க வேண்டும் என்பதால், அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரி அவரை வாக்களிக்க அனுமதிக்க மறுத்ததோடு, காயத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறி பேண்டேஜை அவிழ்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்தும் அதிகாரிகள் பிடிவாதம் காட்டிய நிலையில், இடது முன்னணி வேட்பாளர் சுனில் குமார் தலையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக தலையிட்டு அந்தப் பெண்ணை வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, அக்சயாவின் இடது கை நடுவிரலில் மை வைக்கப்பட்டு அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். உடல்நலக் குறைபாடு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் மீறி அந்த இளம்பெண் காட்டிய உறுதி, வாக்களிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்தது.