ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய பெண் மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். கணவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இவர்களின் உரையாடலைப் பதிவு செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆல்வார் மாவட்டம் கோவிந்த்கர் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா அரோரா என்பவருக்கும், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் கர்ணவ் கத்ரி என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கர்ணவ் ஜெய்ப்பூரில் பணியாற்றி வந்ததால், அர்ச்சனா அவ்வப்போது வாடகை கார் (டாக்ஸி) மூலம் ஜெய்ப்பூர் சென்று கணவரைச் சந்தித்து வருவது வழக்கம். இந்த பயணங்களின் போது, ரிஷப் சர்மா என்ற கார் ஓட்டுநருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தங்களது காதலுக்கு கணவர் கர்ணவ் இடையூறாக இருப்பதாகக் கருதிய இருவரும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். ஒருமுறை ஜெய்ப்பூரில் இருந்து ஆல்வார் நோக்கி ரிஷப் ஓட்டிய காரில் கர்ணவ் பயணித்துள்ளார். பின் இருக்கையில் கர்ணவ் உறங்குவதாக நினைத்த ரிஷப், அர்ச்சனாவுக்கு அலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

அப்போது, “உன் கணவன் இப்போது என் காரில்தான் இருக்கிறான். நீ சம்மதித்தால் இப்போதே அவனை முடித்துவிட்டு (கொலை செய்து) வருகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனா அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான உரையாடலைத் தூங்குவது போல நடித்துக் கேட்டுக்கொண்டிருந்த கர்ணவ், அதனைத் ரகசியமாகத் தனது அலைபேசியில் வீடியோ மற்றும் ஆடியோவாகப் பதிவு செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து மனைவியின் செயல்பாடுகளைக் கண்காணித்த கர்ணவ், அவரது அலைபேசியில் இருந்த ஆதாரங்களையும் திரட்டினார். இதுகுறித்து அர்ச்சனாவிடம் கேட்டபோது, அவர் கணவரை மிரட்டத் தொடங்கியுள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்தபோது, அர்ச்சனா தனது கணவரிடம் ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.

கடந்த 2025 செப்டம்பர் மாதம், வீட்டில் இருந்த ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு அர்ச்சனா வெளியேறினார். பின்னர் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இருப்பினும், கள்ளக்காதலனுடனான தொடர்பு நீடித்து வந்ததால், கடந்த மார்ச் மாதம் கர்ணவ் போலீஸில் புகார் அளித்தார்.

சுமார் ஒரு மாத காலம் தலைமறைவாக இருந்த அர்ச்சனாவும், ரிஷப் சர்மாவும் அண்மையில் ஆல்வார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் அங்கத் சர்மா கூறுகையில், “நீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சனா சிறையில் அடைக்கப்பட்டார். கார் ஓட்டுநர் ரிஷப் சர்மா போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். சட்டவிரோத உறவு மற்றும் பேராசையினால் ஒரு குடும்பமே சிதைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.