பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புதுமாப்பிள்ளை, கோவில் திருவிழாவின் போது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த அக்சித் என்ற இளைஞருக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

மேலும் தனது திருமணத்திற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக உளிமாவு பகுதிக்குச் சென்ற அக்சித், அங்குள்ள கோதண்டராம சாமி கோவில் தேர் திருவிழாவை வேடிக்கை பார்க்கத் தங்கியுள்ளார்.

இதனால் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்ற பல்லக்கு ஊர்வலத்தின் போது, பல்லக்கைச் சுமந்து வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக அக்சித் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்திற்கு காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவான அவரைப் போலீசார் தேடி வருகின்றனர். மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளில் மூழ்கியிருந்த குடும்பத்தினரிடையே இந்த மரணம் ஈடுசெய்ய முடியாத சோகத்தை உண்டாக்கியுள்ளது.