தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு மீதான வெறியால் பெற்ற தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவருக்கு நான்கு வயதில் கீதான்ஷி, கீதான்விகா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர்.
மேலும் தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஆதங்கத்தில் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த ஸ்ரீசைலம், சம்பவத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, குழந்தைகளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்தைக் கொடுத்து, உயிருடன் கிணற்றில் வீசியுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் அந்த இரண்டு பிஞ்சு உயிர்களும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன. குழந்தைகளின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஊர் மக்கள் அந்த நபரைக் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் சமூகத்தில் பெண் குழந்தைகள் மீதான இத்தகைய பிற்போக்குத்தனமான பார்வையும், வன்முறையும் இன்னும் நீடிப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைதான தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
