மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை, அவனது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தாயைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புனே மாவட்டம் குருளி பகுதியைச் சேர்ந்தவர் பஸ்ரின் மெஹபூப் ஷேக் (27). இவரது கணவர் மெஹபூப் ஷேக். இவர்களுக்கு ஆவேஜ் (6) என்ற மகன் இருந்தான். இதற்கிடையில், பஸ்ரின் ஷேக்கிற்கும் ராம் விநாயக் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பஸ்ரின் தனது மகனை அழைத்துக்கொண்டு புனேவிற்கு வந்து வேலை செய்து வந்துள்ளார்.
தங்களது காதலுக்குச் சிறுவன் ஆவேஜ் இடையூறாக இருப்பதாகக் கருதிய இருவரும், அவனைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இரவு, குளியலறையில் இருந்த தண்ணீர்ப் பக்கெட்டில் சிறுவனின் தலையை முக்கிப் பிடித்துள்ளனர். சிறுவன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவனது தலையைச் சுவரிலும் தரையிலும் மோதி மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குப் பிறகு, சிறுவனின் உடலைத் தூக்கிக்கொண்டு பீட் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்ற பஸ்ரின், தனது மகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். ஆனால், சிறுவனின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு சந்தேகமடைந்த அவனது தாத்தா (தாயின் தந்தை), இதுகுறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.
சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், பலத்த காயங்கள் காரணமாகவே சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீஸார் பஸ்ரினிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் இந்தச் சம்பவம் புனே எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கு அங்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ராம் விநாயக்கைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
