உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால் வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை கணவன் அடகு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக உணவின்றி தவித்த அந்தப் பெண்ணிற்கு, காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் சிலிண்டரை மீட்டுக் கொடுத்து உதவியுள்ளனர்.
அதாவது கான்பூர் மாவட்டம் அரௌல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சபினா. இவரது கணவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சபினா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவரது கணவர், மது குடிக்கப் பணம் இல்லாததால் வீட்டிலிருந்த சிலிண்டரை அருகிலுள்ள ஒருவரிடம் ரூ.1,200-க்கு அடகு வைத்துள்ளார்.
தாய் வீட்டிலிருந்து திரும்பிய சபினா, சமையல் செய்ய முற்பட்டபோது சிலிண்டர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலிண்டர் இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக அந்த வீட்டில் அடுப்பு எரியவில்லை. குழந்தைகளும் உணவின்றி தவித்துள்ளனர்.
இது தொடர்பாக சபினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் ஏற்கனவே இரண்டு முறை வீட்டின் பொருட்களை விற்றுவிட்டதாகவும், இப்போது சமையல் சிலிண்டரையும் அடகு வைத்துவிட்டதால் சாப்பாட்டிற்கே வழியில்லை என்றும் கண்ணீருடன் முறையிட்டார்.
பெண்ணின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய சாவடி பொறுப்பு அதிகாரி விஷால் சர்மா மற்றும் அங்கிருந்த காவலர்கள், உடனடியாகச் செயல்பட்டனர். அதிகாரிகள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து, அடகு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரை மீட்டனர். அதோடு நில்லாமல், அந்தச் சிலிண்டரில் எரிவாயு நிரப்பியும் சபினாவிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் இந்தத் தாராள மனப்பான்மையைக் கண்டு நெகிழ்ந்த சபினா, கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மதுப் பழக்கத்தால் ஒரு குடும்பம் சீரழிவதைத் தடுத்து, மனிதாபிமானத்துடன் உதவிய கான்பூர் போலீஸாருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
