உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள செமரியா கிராமத்தில், ஒரே நேரத்தில் 25 அரிய வகை இமயமலை கழுகுகள் (Himalayan Griffon vultures) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் வயல்வெளியில் கழுகுகள் கூட்டமாக வட்டமிடுவதை பார்த்த விவசாயி ஒருவர், திடீரென அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதிகாரிகள் வந்து பார்த்தபோது 25 கழுகுகள் ஏற்கனவே உயிரிழந்து கிடந்தன.
இது ஒரு மறைமுக விஷச் சாவாக (Secondary Poisoning) இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தெருநாய்களைக் குறிவைத்து யாரோ பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சாதத்தை வயலில் கொட்டியிருக்கலாம் என்றும், அதை உண்டதால் கழுகுகள் பலியாகியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிருக்குப் போராடிய 6 கழுகுகள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் நான்கு கழுகுகள் குணமடைந்து பறந்து சென்ற நிலையில், மற்றவை தீவிர கண்காணிப்பில் உள்ளன. உயிரிழந்த கழுகுகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரிய வகை உயிரினங்களைக் காக்க, நச்சுப் பொருட்களைத் தவிர்க்கக் கோரி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.
