ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில், புகையே வெளிப்படுத்தாத எலக்ட்ரிக் கார் ஒன்றிற்கு புகைச்சோதனை சான்றிதழ் (PUC) இல்லை எனக் கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜோத்பூரைச் சேர்ந்த புனாராம் என்பவரது புதிய எலக்ட்ரிக் காரை தடுத்து நிறுத்திய போலீசார், விதிகளை மீறி புகைச்சோதனைக்காக ₹1500 மற்றும் கார் கண்ணாடியில் வலை இருந்ததற்காக ₹200 என மொத்தம் ₹1700 அபராதம் வசூலித்துள்ளனர். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புகைச்சோதனை சான்றிதழ் அவசியமில்லை என்று ஓட்டுநர் வாதிட்டும், போலீசார் பிடிவாதமாக அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போலீசாரின் அறியாமையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொழில்நுட்ப அறிவு மற்றும் அடிப்படை போக்குவரத்து விதிகள் கூட தெரியாமல் போலீசார் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள காரின் உரிமையாளர், இந்த அநீதிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் சூழலில், இத்தகைய குளறுபடிகள் வாகன உரிமையாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
