நியூயார்க்கின் லாங் ஐலண்ட் பகுதியில் பல ஆண்டுகளாகப் பெண்களைக் கொன்று உடல்களை வீசி வந்த 62 வயது கட்டிடக் கலை நிபுணர் ரெக்ஸ் ஹியூர்மேன், தான் செய்த 8 கொலைக் குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட இவர், முதலில் தான் நிரபராதி என்று கூறி வந்தார்.

ஆனால், தற்போது 1993-ஆம் ஆண்டு செய்த முதல் கொலை உட்பட மொத்தம் 8 பெண்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். பண ஆசை காட்டி பெண்களை வரவழைத்து, அவர்களைக் கொன்று, கை கால்களைக் கட்டி, தடிமனான துணியால் உடல்களைச் சுற்றி கடற்கரை ஓரங்களில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த மர்மக் கொலை வழக்குகளில், ஒரு பிட்சா துண்டிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ ஆதாரம் மற்றும் கடன் அட்டை விவரங்கள் மூலம் போலீஸார் ஹியூர்மேனைச் சரியாகக் கண்டுபிடித்தனர். 2010-ஆம் ஆண்டில் கில்போ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் உடல்கள் இந்த வழக்கில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன.

2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தீவிர முயற்சியால் இந்த சீரியல் கில்லர் பிடிபட்டார். பல குடும்பங்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடர் கொலை வழக்கில், அவருக்கு ஜூன் 17-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.