கேரளாவில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், கேரளா மாநிலத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகளான அஷ்வந்த் மற்றும் திவ்யஸ்ரீ, திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்திலேயே நேராக வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தங்களது திருமண வாழ்வில் இணையும் அதே நாளில் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றிய இந்தத் தம்பதியை அங்கிருந்த பலரும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்து மணமகன் அஷ்வந்த் பேசுகையில், தங்களது திருமணத் தேதி முன்பே முடிவாகிவிட்டதாகவும், தேர்தல் தேதியுடன் அது தற்செயலாக ஒரே நாளில் அமைந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
வெளியூரில் பணிபுரிந்ததால் கடந்த சில தேர்தல்களில் தம்மால் வாக்களிக்க முடியாமல் போனதை வருத்தத்துடன் குறிப்பிட்ட அவர், இன்று மனைவியுடன் இணைந்து வாக்களித்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். தங்களைப்போலவே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதே சமூகத்திற்கு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
