19-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான இந்தத் தோல்விகளால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஃபீல்டிங் வியூகங்கள் மற்றும் பந்துவீச்சாளர்களைக் கையாளும் விதம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் உள்ளிட்ட பலரும் அவரது கேப்டன்சி அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். ருதுராஜின் பேட்டிங் ஃபார்ம் சரிந்துள்ள நிலையில், அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.

இதுவரை 21 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ள அவர், அதில் 13 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளார். இதற்கிடையில், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேட்டிங் அல்லது கேப்டன்சி இதில் எது உங்களுக்குப் பயம் என்று கேட்டதற்கு, ருதுராஜ் “டாஸ்” என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.

அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு 21 போட்டிகளில் 16 முறை டாஸ் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச்சரிவுகளிலிருந்து மீண்டு வந்து சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.