நாட்டில் நிலவும் மின் தேவையை கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சேமிக்கும் பொருட்டு நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளின் நேரத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் (IPL 2026) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வங்கதேச கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது. அதேபோல், இலங்கை மகளிர் அணியும் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இரு தொடர்களிலும் தலா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி, பல போட்டிகள் பகல்-இரவு ஆட்டங்களாக மின்னொளியில் நடைபெறவிருந்தன. ஆனால், மின் சேமிப்பை முன்னிட்டு தற்போது அனைத்துப் போட்டிகளும் பகல் நேர ஆட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி மகளிர் ஒருநாள் போட்டிகள்: காலை 11 மணிக்கு தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே (மாலை 6:30 மணிக்குள்) முடிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஆண்கள் டி20 தொடர்: மதியம் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5:10 மணிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் டி20 தொடர்: ஏப்ரல் 28, 30 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இப்போட்டிகள் மாலை 6:30 மணிக்கு பதிலாக, மதியம் 1:30 மணிக்கே தொடங்கும். மின்னொளி விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் பெருமளவிலான மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நேர மாற்றத்தால் ரசிகர்கள் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போட்டியை ரசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
