நாட்டையே உலுக்கும் ஒரு கொடூரமான கொலை சம்பவம் டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் அரங்கேறியுள்ளது. 35 வயதுடைய திருமணமான பெண் ஒருவர், தனது 22 வயது காதலனால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, படுக்கை பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது மாமா மற்றும் அவரது நண்பருடன் உடலுறவு கொள்ள மறுத்த ஆத்திரத்தில், அந்தப் பெண்ணைத் தரை மட்டமாக்கி, தலையணையால் அமுக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் காதலன் காவல்துறையினரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொலையைச் செய்த காதலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாமா உள்ளிட்ட மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மங்கோல்புரியில் உள்ள ஒரு பிஜியில்  தனது தோழியைச் சந்திக்க அறை கேட்ட 22 வயது இளைஞன், அங்கு வைத்து இந்தப் பெண்ணைக் கொலை செய்துள்ளார். அவர் கொலை செய்யும் போது, அவரது 50 வயது மாமாவும் 52 வயது நண்பரும் கதவுக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். பிஜி உரிமையாளர் இரவு வந்து பார்த்தபோது, அறை திறந்திருப்பதையும், படுக்கைப் பெட்டியிலிருந்து ஒரு கால் நீட்டிக்கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

உடனே போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விசாரணையில், வீட்டு வேலை செய்து வந்த அந்தப் பெண்ணிற்கும் கோழி இறைச்சி கடை வைத்திருந்த இளைஞனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது மூவர் மீதும் கொலை மற்றும் ஆதாரம் மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.