தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி, தற்போது ‘மூக்குத்தி அம்மன்-2’ மற்றும் ‘புருஷன்’ போன்ற படங்களை இயக்குவதில் பிஸியாக உள்ளார். இதற்கிடையில், அவர் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில், சுந்தர்.சி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ‘கலகலப்பு-3’ படத்தை இயக்குவதற்காக ஒரு தனியார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு, தற்போது அந்தப் பணிகளைச் செய்யாமல் ஏமாற்றுவதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்தத் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ள புகாரில், சுந்தர்.சி-க்கு முன்பணமாக ரூ.50 லட்சமும், மற்ற நடிகர்களுக்கு ரூ.59 லட்சமும் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘அரண்மனை-4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி தனது சம்பளத்தை ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தியதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் பல மடங்கு அதிகரிக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதனால் படத்தை ரத்து செய்துவிட்டு கொடுத்த முன்பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுந்தர்.சி மிரட்டல் விடுப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ள இந்த புகார் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
