தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் பெறும் நடைமுறைகள் இன்றுடன் நிறைவடைந்தன. கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கலில் அரசியல் கட்சியினரும் சுயேச்சைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அடுத்த மாதம் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரம் மாறியுள்ளது.
இங்கு காங்கிரஸ் சார்பில் வி.பி.துரை, அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா, நாம் தமிழர் கட்சியின் நத்தம் சிவசங்கரன், தவெக சார்பில் ராஜகோபால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் இசை கண்ணன் என மொத்தம் 5 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். மற்ற தொகுதிகளுடன் ஒப்பிடுகையில், இங்கு மிகக் குறைந்த வேட்பாளர்களே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
