கூகுள் பே (GPay) செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘பாக்கெட் மணி’ (Pocket Money) அம்சம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், இது பயனாளர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான அம்சம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ஜிபே செயலியில் உள்ள ‘பாக்கெட் மணி’ ஐகானைக் கிளிக் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணமும் திருடப்பட்டுவிடும்; இது ஒரு புதிய வகை மோசடி” என்று எச்சரிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.
உண்மையில், ‘பாக்கெட் மணி’ என்பது ஜிபேயின் புதிய அம்சமான ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) என்பதன் ஒரு பகுதியாகும். இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் செலவுகளைக் கண்காணித்து, டிஜிட்டல் முறையில் பணம் வழங்க உதவும் ஒரு அதிகாரப்பூர்வ அம்சமாகும். இதை கிளிக் செய்வதால் பணம் தானாகவே திருடப்படாது.
தனியாக வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப உறுப்பினர்கள், உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ஜிபே மூலம் பணம் செலுத்த இந்த அம்சம் வழிவகை செய்கிறது. இதில் இரண்டு முக்கிய வசதிகள் உள்ளன.
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒரு கடையில் ஸ்கேன் செய்யும்போது, உங்கள் மொபைலுக்கு அனுமதி கோரி மெசேஜ் வரும். நீங்கள் உங்கள் ‘யுபிஐ பின்’ (UPI PIN) எண்ணைப் போட்டால் மட்டுமே பணம் செலுத்தப்படும்.
குறிப்பிட்ட நபருக்கு மாதம் இவ்வளவு ரூபாய் (உதாரணமாக ₹2,000) என நீங்கள் வரம்பு நிர்ணயித்துவிடலாம். அந்தத் தொகை வரை அவர் உங்களிடம் கேட்காமலேயே செலவு செய்ய முடியும். அதற்கு மேல் சென்றால் உங்கள் அனுமதி தேவைப்படும்.
வீட்டில் உள்ள பிள்ளைகள் அல்லது முதியவர்களுக்குத் தனி வங்கிக் கணக்கு இல்லையென்றாலும், உங்கள் கணக்கு மூலமே அவர்கள் ஜிபே பயன்படுத்தலாம். அவர்கள் எங்கு, எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை உங்கள் போனில் இருந்தே கண்காணிக்க முடியும். எப்போது வேண்டுமானாலும் இந்தச் சேவையை நீங்கள் ரத்து செய்யலாம்.
இந்த சேவையை செயல்படுத்த ஜிபே செயலியில் உங்கள் ‘புரொபைல்’ (Profile) பகுதிக்குச் செல்லவும். அதில் ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் குடும்ப உறுப்பினரின் மொபைல் எண்ணைச் சேர்த்து, அவருக்கான பண வரம்பை (Limit) நிர்ணயம் செய்து ‘இன்வைட்’ (Invite) அனுப்பவும்.
அவர் தனது போனில் அதை ஏற்றுக்கொண்டால் (Accept), இந்தச் சேவை தொடங்கிவிடும்.
எனவே, இது பாதுகாப்பான டிஜிட்டல் வசதியே தவிர மோசடி அல்ல எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
