ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அந்நாட்டு ராணுவத்திற்குத் தாக்குதல்களை நிறுத்துமாறு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் நடைபெற்ற தாக்குதலில் முன்னாள் தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் மூண்டது. குறிப்பாக, உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரானின் பொது உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகளும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன.

இந்த போர் நிறுத்த உத்தரவு குறித்துப் பேசிய உச்ச தலைவர் மொஜ்தபா, ராணுவப் பிரிவுகள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அதே வேளையில், இது போரின் முடிவைக் குறிக்காது என்றும் எச்சரித்துள்ளார். வரவிருக்கும் ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ள சூழலில், இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என்பதைத் தெஹ்ரான் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் கைகள் இன்னும் துப்பாக்கியின் விசையிலேயே உள்ளன எதிரி சிறு தவறு செய்தாலும் கடும் பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாதது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.