ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மட்டையை நீண்ட நேரம் ஆய்வு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வெறும் 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் சூர்யவன்ஷி விளாசி வரும் சிக்ஸர்கள் பாண்டியாவை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

1,170 கிராம் எடையுள்ள ‘எஸ்.எஸ்’ ரக மட்டையை சூர்யவன்ஷி பயன்படுத்துகிறார்; இதன் விலை சுமார் 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் சென்னைக்கு எதிரான போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி, உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.நேற்று குவஹாத்தியில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் மட்டுமே விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்டதால் விதிகளும் மாற்றப்பட்டு, பவர்பிளே ஓவர்கள் 3.2 ஆகக் குறைக்கப்பட்டது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு போட்டி தொடங்கியதால் மைதானத்தில் பரபரப்பு நிலவியது. குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இரு அணி வீரர்களும் தீவிரமாக முயற்சி செய்தனர்.