ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக அறிவிக்கப்பட்ட மோஜ்தபா கமேனி தற்போது சுயநினைவின்றி கோமா நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகப் பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான தி டைம்ஸ் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் மோஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க உளவு அமைப்புகளின் ரகசிய ஆவணங்களின்படி அவர் தற்போது தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் நூற்று நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோம் நகரில் சிகிச்சையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகத் தனது வீட்டின் தோட்டத்தில் உலாச் சென்றதால் அவர் உயிர் தப்பிய போதிலும் ஏவுகணை வீச்சில் அவருக்குப் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

ஈரான் நாட்டின் அதிகாரம் தற்போது யாருடைய கையில் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மோஜ்தபா கமேனி எவ்வித முடிவுகளையும் எடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

போர் மற்றும் போர்நிறுத்தம் குறித்து அவரது பெயரில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் ஈரானின் புரட்சிகர காவற்படையால் வெளியிடப்படுவதாகவும் அவர் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையிலேயே இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் பதவியேற்றது முதல் ஒருமுறை கூட பொதுவெளியில் தோன்றாதது இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஈரானை ஆள அவர் தகுதியற்றவர் என்று அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதப் பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருவது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.