உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் 2 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு வேலைக்காகக் காவலராகப் பணியாற்றிய தனது மனைவியையும் மூன்று வயது மகனையும் கணவனே திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தான் சிங் என்ற நபர் தனது இரண்டாவது மனைவி லதா மற்றும் மகன் அவான்ஷ் ஆகியோரை நைனிடாலில் இருந்து திரும்பும் வழியில் விபத்து ஏற்படுத்திக் கொல்ல முயன்றுள்ளார். முதலில் தனது காரை ஒரு லாரியின் மீது மோதச் செய்த அவர், பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி மனைவி மற்றும் மகனுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார்.

அவர்கள் இருவரும் மயக்கமடைந்ததும் தனது கூட்டாளிகளை வரவழைத்துக் காரின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். இந்தக் கொடூரத் தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் அவான்ஷ் உடல் கருகி உயிரிழந்த நிலையில், தீப்பற்றியவுடன் லதா மயக்கம் தெளிந்து காரில் இருந்து வெளியே தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் இரக்கமற்ற கணவன் தான் சிங், அவரை மற்றொரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சுத்தியலால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட காரில் பெட்ரோல் வாடை வீசியதும், லதாவின் தலையில் இருந்த காயங்கள் விபத்தினால் ஏற்பட்டவை அல்ல என்பதும் தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் தான் சிங்கின் முதல் மனைவியும் ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாகத் தான் சிங் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.