மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், 95.5% முஸ்லீம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. SIR பணிகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுகள் நீக்கப்பட்டது திட்டமிட்ட சதி என மம்தா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய மம்தா, இதற்குப் பின்னால் இருப்பவர்களுக்குத் தேர்தல் முடிவில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி இந்த விவகாரத்தில் மம்தாவை கடுமையாகச் சாடியுள்ளார். முறையான தேர்தல் பணிகள் நடப்பதால், தில்லுமுல்லு செய்ய முடியாது என்ற அச்சத்தில் மம்தா இத்தகைய புகார்களைக் கூறி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். ஓட்டு நீக்க விவகாரத்தால் நந்திகிராம் தொகுதியில் தற்போது தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
