ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து, கனடா நாட்டை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளார். முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம் என்றும், அந்நாட்டின் மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டி வந்த டிரம்ப், தற்போது கனடாவின் 200 ஆண்டுகால வரலாறும் அடையாளமும் மிகவும் வலிமையானவை என்று புகழ்ந்துள்ளார்.

வரலாற்று ஆசிரியர் ராபர்ட் ஹார்ட்மேனுடனான நேர்காணலில், கனடாவைச் சில ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது என்பதால் அந்தத் திட்டம் இனி சாத்தியமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதே உரையாடலில், பிரிட்டிஷ் மன்னர் சார்லஸை ஒரு நல்ல மனிதர் என்று பாராட்டிய டிரம்ப், புற்றுநோய்க்கு எதிராக அவர் காட்டும் தைரியத்தையும் மெச்சியுள்ளார். ஈரான் போர் விவகாரத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், இம்மாத இறுதியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான கசப்புணர்வை நீக்கி, உறவை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவின் சுதந்திரத்தைப் பாராட்டியுள்ள டிரம்பின் இந்த மாற்றத்தை உலக நாடுகள் நிம்மதியுடன் கவனித்து வருகின்றன.