தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அஸ்வின், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென ஓய்வு பெற்றதற்கான உண்மையான காரணத்தை முதன்முறையாகப் பகிர்ந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வின், கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்நிலையில், சொந்த ஊரான சென்னையிலேயே தனது பயணத்தை முடிக்க நினைத்ததாகவும், ஆனால் கடந்த சீசன் தனக்கு மிகுந்த வலியையும் ஏமாற்றத்தையும் அளித்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன்னை அணியில் தக்கவைப்பதா அல்லது விடுவிப்பதா என்ற குழப்பத்தையும் தலைவலியையும் சென்னை அணி நிர்வாகத்திற்குத் தர தான் விரும்பவில்லை என்றும், அதனாலேயே சுயமாக ஓய்வு முடிவை எடுத்ததாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

தான் விலகியதன் மூலம் மிச்சமாகும் 10 கோடி ரூபாயை வைத்து, மினி ஏலத்தில் சிஎஸ்கே நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேர்வு செய்ய உதவும் என நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல்-லிருந்து விலகினாலும், வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக அஸ்வின் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.