கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் இதர காவலர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பல்வேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும், சாட்சியங்களும் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதன்படி உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர். நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சிபிஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீசாரையும் குற்றவாளிகள் எனக்கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது நீதிபதிகள் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை அறிவித்துள்ளனர். அதன்படி இந்த குற்ற செயல்களில் ஈடுபடும் போலீசாருக்கு மரண தண்டனை வழங்குவது தான் சரியா அப்போதுதான் இது போன்ற குற்றங்களை செய்ய போலீசார் பயப்படுவார்கள் என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால் கண்டிப்பாக அச்சம் ஏற்படாது. ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணி வேரையை சாய்ந்துள்ளனர்.
சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.
காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள் வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் தந்தை மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல் பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும் என்று கூறினார்.
