தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கிய மனுத்தாக்கல் பணிகளில், இடையில் நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால், கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. பலத்த பாதுகாப்பு மற்றும் ஆதரவாளர்களின் உற்சாகத்திற்கு இடையே அமைச்சர் துரைமுருகன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது மனுவை சமர்ப்பித்தார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி இவருக்கு சுமார் ரூ.11.5 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. அமைச்சரை விட அவரது மனைவி பெயரிலேயே அதிக சொத்துகள் உள்ளன. சாந்தகுமாரி பெயரில் மொத்தம் ரூ.59 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரிடம் அரை கிலோ தங்கம், ஒரு கேரட் வைரம் மற்றும் 2 கிலோ வெள்ளி கைவசம் உள்ளது.
ஒட்டுமொத்தமாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சேர்த்து சுமார் ரூ.70.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
