தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 6) சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்குச் செல்வதற்கு வெறும் ஒரு மணிநேரம் மட்டுமே காவல்துறை காலக்கெடு விதித்ததாகவும், இவ்வளவு குறுகிய காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்வது சாத்தியமில்லை என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களின் அன்புக்குரிய தலைவரைக் காண ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் பொது மக்கள், விஜய்யின் வருகை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். காவல்துறையின் இத்தகைய நேரக் கட்டுப்பாடுகளே பிரச்சார முடக்கத்திற்குக் காரணம் எனத் தவெக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
