ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக அவர் விதித்த 10 நாள் காலக்கெடு வரும் திங்கட்கிழமையுடன் முடிவடையும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் ‘மின் உற்பத்தி நிலைய தினம்’ மற்றும் ‘பால தினம்’ என்று பெயரிட்டுத் தாக்குதல்கள் தொடங்கும் எனத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மிகப்பெரிய பாலமான பி1 பாலத்தைத் தாக்கி அழித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக மின்சாரம் மற்றும் நீர் உள்கட்டமைப்புகளை அழிக்கத் திட்டமிட்டுள்ளதால் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவின் இந்த மிரட்டல்களை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளதுடன், இவை போர்க்குற்றங்கள் என்று சாடியுள்ளது. அமெரிக்கா தாக்கினால் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய இடங்கள் மீது பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகள் மூலம் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், உலக எண்ணெய் விநியோகத்தில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

“>

 

தற்போது நிலவும் இந்த மோதல் போக்கு, ஒரு முழுமையான போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.