ஐபிஎல் 2026 தொடரின் 10-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த ஒரு அதிரடி முடிவு அந்த அணிக்குச் சாதகமாக முடிந்தது.

தொடக்க வீரராகக் களம் இறங்காமல், பின்வரிசையில் இறங்கிய பண்ட், பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட் தூணாக நின்றார். டெல்லி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பண்ட், இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடி 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவர் வரை சென்ற இந்தத் திரில்லர் ஆட்டத்தில், இன்னும் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் லக்னோ அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

சொந்த மண்ணில் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்விக்க நினைத்த ஹைதராபாத் அணிக்கு, லக்னோவின் பந்துவீச்சும் பண்ட்டின் நிதானமான ஆட்டமும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி இந்தத் தொடரில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.