சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே சந்தித்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய முன்னாள் வீரர் அஸ்வின், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தும் சென்னை அணி கூடுதல் ரன்களைக் குவிக்கத் தவறிவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.
12-வது ஓவரிலேயே சிஎஸ்கே வீரர்களின் உடல்மொழி சோர்ந்துவிட்டதைக் கண்டு தாம் மிகவும் வருத்தப்பட்டதாகவும், சென்னை மண்ணின் பெருமையையும் அணியின் பாரம்பரியத்தையும் புதிய இளம் வீரர்கள் மீது ஒரு அழுத்தமாக மாற்றிவிடக் கூடாது என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இளம் வீரர்கள் முதிர்ச்சி அடையும் போது சிஎஸ்கே மீண்டும் ஒரு பலமான அணியாக உருவெடுக்கும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தோனி வீரர்களுடன் இருக்கும்போது அந்த இடமே உற்சாகமாக மாறும் என்றும், அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சிஎஸ்கே தனது அடுத்த லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்று சென்னை அணி மீண்டும் ஃபார்முக்கு வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
