ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுப்பதாக வெளியான செய்திகளை அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஈரானின் நிலப்பாட்டைத் தவறாகச் சித்தரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தங்கள் நாடு ஒருபோதும் தயங்கியதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தப் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதே ஈரானின் முக்கிய நோக்கம் என்றும், இதில் பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிகளை வரவேற்பதாகவும் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியடைந்ததாக வெளியான தகவல்கள் வெறும் தவறான புரிதலால் ஏற்பட்டவை எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில், அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து உருவாக்கியுள்ள ‘ஐந்து அம்சத் திட்டம்’ குறித்து சவூதி அரேபியாவுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவும் தனது தரப்பில் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தங்களை ஒரு தளமாக வழங்க முன்வந்துள்ளன. இத்தனை முயற்சிகளுக்கு மத்தியிலும் போர்க்களத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.
