உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில், சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கிக் கிடந்த தனது தாயின் உயிரைக் காப்பாற்ற 8 வயது சிறுவன் ஒருவன் போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களின் மனிதாபிமானமற்ற போக்கையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கான்பூர் வீதியில் கடும் வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, சுமார் 8 அல்லது 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், சாலையோரம் மயங்கிக் கிடந்த தனது தாயின் உயிரைக் காக்கப் போராடிக்கொண்டிருந்தான். வியர்வையில் நனைந்த உடல், வெறுங்கால்கள் என அந்தச் சிறுவனின் கண்கள் பெரும் தவிப்பை வெளிப்படுத்தின. ஏதோ ஒரு திரைப்படக் காட்சி போலத் தெரிந்த இந்தச் சம்பவம், வறுமையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள அந்த வீடியோவில், தாய் மயங்கிக் கிடக்க, சிறுவன் கையில் தண்ணீர் பாட்டிலுடன் அங்குமிங்கும் ஓடுகிறான். கொதிக்கும் தார்ச்சாலையில் வெறுங்காலுடன் ஓடி வந்து, தாயின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரை எழுப்பத் தீவிரமாக முயல்கிறான். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் மெல்லக் கண் விழித்தார். அப்போது அந்தச் சிறுவனின் முகத்தில் தெரிந்த நிம்மதி, தாயின் மீதான அவனது அளவற்ற அன்பைப் பறைசாற்றியது.

இந்தச் சம்பவத்தில் மிகவும் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் தவித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் உதவிக்கு முன்வரவில்லை. மாறாக, பலரும் தங்கள் அலைபேசியில் இந்தச் சோகத்தை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

இந்த வீடியோவைப் பார்த்த இணையதளவாசிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்: முதலில் உதவி செய்யுங்கள், அப்புறம் வீடியோ எடுக்கலாம் எனப் பலரும் சாடியுள்ளனர். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பைச் சுமந்த அந்தச் சிறுவனுக்கு முன்னால், நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். உதவி செய்யாமல் வீடியோ எடுத்த நபரின் செயலைச் சுட்டிக்காட்டி, “அந்தக் குழந்தைக்குத் தேவைப்பட்டது உதவி, கேமரா அல்ல எனப் பலரும் விமர்சித்துள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய உலகில், மனிதநேயம் மங்கி வருவதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.