பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் இன ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நடனக் குழுவினர் பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள பொதுக் கழிவறையைப் பயன்படுத்த முயன்றபோது, அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அடையாள அட்டையைக் கேட்டுள்ளார்.
இதற்கு அந்தப் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அந்த ஊழியர் அவர்களை “மோமோஸ்”, “சிங்கி” மற்றும் “சீனர்கள்” என இன ரீதியாகச் சாடி, எள்ளி நகையாடியுள்ளார். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் சிரித்துக்கொண்டே இழிவுபடுத்திய காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
Disturbing video from Patna: Arunachal girls allegedly called slurs and denied washroom access. No one should face racism in India. Hope authorities investigate fairly and ensure such incidents don’t repeat. Respect for all regions🇮🇳pic.twitter.com/NrR4PDuYOG
— Gully Ka Gunda (@gullykagunda) April 3, 2026
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தவாறே, “நாங்கள் வடகிழக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாவுக்காக வருகிறோம். ஆனால், இதுபோன்ற ஓரிரு சம்பவங்களால் நாங்கள் பிற மாநிலங்களுக்கு வரப் பயப்படுகிறோம்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேச மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பீகார் காவல்துறை மற்றும் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோர் இதில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பிற நகரங்களில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் வடகிழக்கு இந்திய மக்கள், பல ஆண்டுகளாக இத்தகைய இன ரீதியான வசவுகள், வீட்டு வாடகை மற்றும் வேலைவாய்ப்பில் பாகுபாடு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவது இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நியர்களைப் போலத் தங்களை நடத்துவதை நிறுத்தி, சக இந்தியர்களாக மதிக்க வேண்டும் என்பதே வடகிழக்கு மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
