புதுச்சேரியில் மதுபான விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும், மொத்த விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் கலால் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறும் கடைகளின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல மதுபானக் கடைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் விற்பனையின் போது முறையான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை எனத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கலால் துறை துணை ஆணையர் மாத்யூ பிரான்சிஸ் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் மதுபானம் வாங்கும் அளவு எதுவாக இருந்தாலும், அனைத்து மதுபானக் கடைகள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான ரசீதை வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரசீது வழங்காமல் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் அனைத்தும் ‘மொத்த விற்பனை’ கணக்கிலேயே சேர்க்கப்படும்.

“2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களைத் தூண்டுவதற்காக மதுபானங்களைக் குவித்து வைப்பதைத் தடுப்பதே இந்த உத்தரவின் நோக்கம். ரசீது இல்லாமல் விற்கப்படும் மதுபானங்கள், அரசியல் கட்சியினர் மதுவை சட்டவிரோதமாகப் பதுக்க வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது” என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது மற்றும் ரசீது வழங்காதது போன்ற தவறுகள் புதுச்சேரி கலால் சட்டம் 1970-இன் பிரிவு 28(1)(e)-இன் கீழ் மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படும். விதிகளை மீறும் உரிமதாரர்களின் உரிமம் (License) உடனடியாக இடைநீக்கம் (Suspension) அல்லது ரத்து (Cancellation) செய்யப்படும் எனத் துணை ஆணையர் எச்சரித்துள்ளார். மேலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கலால் துறையின் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவு மதுபான வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.