ஐடி துறையில் ஆட்குறைப்பு (Layoffs) செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில், மொஹாலியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் ஊழியருக்கு நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் 31-ம் தேதி நடந்த ஒரு மீட்டிங்கில், “நிதியுதவி இல்லை, புராஜெக்ட்கள் இல்லை” என்று கூறி 20 பேர் கொண்ட குழுவை நிறுவனம் உடனடியாக வேலையை விட்டு நீக்கியுள்ளது.
ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த டெக்கியை மட்டும் தனியாக அழைத்த நிர்வாகம், ஒரு விசித்திரமான டீலை முன்வைத்துள்ளது. அதாவது, “உனக்கு வொர்க் ப்ரம் ஹோம் தருகிறோம், பழைய சம்பளமான ₹23,000-ல் இருந்து கூடுதலாக ₹2,000 தருகிறோம்.
ஆனால், ஒரு டீம் பார்த்த ‘ஃபுல் ஸ்டேக்’ மற்றும் ‘மொபைல் டெவலப்மென்ட்’ வேலைகளை நீ ஒருவனே பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை.
வேலை போன பயத்தில் 8 மாத அனுபவம் கொண்ட அந்த இளைஞர் இந்த ஆஃபரை ஏற்றுக்கொண்டாலும், இதைக் கேள்விப்பட்ட சமூக வலைதளவாசிகள் கொந்தளித்துள்ளனர்.
ஒரு முழு டீம் பார்க்க வேண்டிய வேலையை, ஒருவருக்குக் கூடுதல் சம்பளம் தருவது போலக் காட்டி ஒரே ஆளிடம் வாங்குவது உழைப்புச் சுரண்டல் என்று பலரும் சாடி வருகின்றனர்.
வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி இப்படி ஒரு சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் அந்த இளைஞருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். செலவைக் குறைக்க நிறுவனங்கள் கையாளும் இத்தகைய தந்திரங்கள் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
