தெலுங்கானா மாநிலம் காந்த்ரபள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மரண ஓலம் ஓய்ந்தபாடில்லை. கடந்த 90 நாட்களில் மட்டும் முதியவர்கள் முதல் ஆரோக்கியமான இளைஞர்கள் வரை மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொடர் மரணங்களால் அச்சமடைந்த மக்கள், தங்கள் கிராமத்தின் மீது ஏதோ தீய சக்தி சூழ்ந்திருப்பதாக நம்பினர். இது குறித்து கிராமப் பெரியவர்கள் மற்றும் ஜோதிடர்களிடம் ஆலோசித்தபோது, கிராமத்தின் ‘ஜாதகம்’ சரியில்லை என்றும், விபரீதத்தைத் தவிர்க்க ஊரை காலி செய்ய வேண்டும் என்றும் பூசாரி ஒருவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, வியாழக்கிழமை அதிகாலையிலேயே ஒட்டுமொத்த கிராம மக்களும் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு, கால்நடைகள் மற்றும் குழந்தைகளுடன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
அங்கு கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ள மக்கள், பாரம்பரிய முறைப்படி உணவுகளைச் சமைத்து தெய்வங்களுக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்து வருகின்றனர்.
அறிவியல் வளர்ந்த இந்த காலத்திலும் மக்கள் மருத்துவர்களை நாடாமல், பயத்தின் காரணமாக ஊரை விட்டு வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், 28 உயிரிழப்புகள் என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்பதால், சுகாதாரத் துறையினர் உடனடியாக அங்கு மருத்துவ முகாம்களை அமைத்து, குடிநீர் மாசுபாடு அல்லது மர்மத் தொற்று ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
