மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள பாச்சோரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமம், கோடை காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் நுகர்வுக்கு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்த விசித்திரமான விதியை மீறி ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
மேலும் கிராம மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதே இந்த விசித்திரமான முடிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணமாகும். குறிப்பாக, கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இந்தத் தைரியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்குப் பின்னால் மற்றொரு முக்கியமான சமூக காரணமும் உள்ளது. கிராமத்தில் உள்ள ஏழை எளிய வீட்டுத் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில், மற்றவர்கள் ஐஸ்கிரீம் வழங்குவதைப் பார்த்து தங்களால் வழங்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை பலருக்கு ஏற்படுகிறது.
இந்த ஆடம்பரச் செலவைக் குறைக்கவும், தேவையற்ற போட்டிகளைத் தவிர்க்கவும் கிராம நிர்வாகம் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளது. சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிக்கனத்தை வலியுறுத்தும் இந்த கிராமத்தின் முடிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
